விளைந்த நெற்கதிர்களை பறவைகளிடம் இருந்து பாதுகாக்க புதிய யுக்தி வயலில் சேலையை கொண்டு வேலி அமைத்த விவசாயிகள்


விளைந்த நெற்கதிர்களை பறவைகளிடம் இருந்து பாதுகாக்க புதிய யுக்தி வயலில் சேலையை கொண்டு வேலி அமைத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 24 Dec 2020 10:41 PM IST (Updated: 24 Dec 2020 10:41 PM IST)
t-max-icont-min-icon

விளைந்த நெற்கதிர்களை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி நெல் வயல்களை சுற்றி விவசாயிகள் சேலைகளை கொண்டு வேலி அமைத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று கூறுவார்கள். விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் கஷ்டப்பட்டு விளைவித்தாலும் கூட அவற்றை பாதுகாக்க பெரிய அளவில் போராட வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியானது வானம் பார்த்த பூமியாக உள்ளதால் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழையானது நன்றாக பெய்து இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே இ்ங்கு விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது. இந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். ஏற்கனவே கண்மாய், வரத்துக்கால்வாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தயாராக இருந்த காரணத்தினால் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியும், சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் போனது.

ஏற்கனவே முன்கூட்டியே விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது அறுவடைக்காக காத்திருந்த நிலையில் இந்த மழையானது நெல் பயிரை முற்றிலும் மூழ்கடித்து ஒருபுறம் விவசாயிகளை வேதனைப்படுத்தியது. மேலும் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழையில்லாததால் அப்போது பயிரிட்ட பயிர்கள் எல்லாம் கருகி போனது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளால் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமும், பெரும் நஷ்டமும் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் கிணற்று பாசனம் மற்றும் மழை நீரை பயன்படுத்தி பயிர்களை போராடி காப்பாற்றி வந்த விவசாயிகளின் நிலத்தில் தற்போது நெல்பயிர்கள் கதிர் விட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இருந்தாலும் ஆடு, மாடு, குரங்கு மற்றும் குருவி, காக்கை, மயில் உள்ளிட்டவைகளால் நெற்பயிர்கள் அதிகளவில் சேதமடைய தொடங்கியது.

இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி பறவைகளிடம் இருந்து நெற் பயிரை காப்பாற்றும் வகையில் வயலை சுற்றி சேலைகள் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். பகல் நேரங்களில் விலங்குகள் தொல்லையும், இரவு நேரங்களில் மயில் உள்ளிட்ட பறவைகள் வயலில் இறங்கி நெல்பயிரை சேதப்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். இதனால் எளிதாக வயலில் உள்ளே விலங்குகள் மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க முடியும். இதுதவிர பகல் நேரங்களில் வயல்வெளிகளுக்கு செல்லும் விவசாயிகள் ஒலிகளை எழுப்பியும் நெற்பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

Next Story