மாவட்டத்தில் 34 இடங்களில் தி.மு.க. கிராமசபை கூட்டம் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டத்தில் 34 இடங்களில் தி.மு.க.வினர் கிராம சபை கூட்டங்களை நடத்திய நிலையில் இக்கூட்டங்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
அ.தி.மு.க. சார்பில் வருகிற 27-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் ஏற்கனவே தனது சொந்த கிராமத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதை தொடர்ந்து தி.மு.க.வினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத்தொடங்கிவிட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை உத்தரவிட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 34 இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அருப்புக்கோட்டை காந்தி நகரிலும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. நரிக்குடி மல்லாங்கிணறு அருகேயுள்ள சுரம்பட்டி கிராமத்திலும் நடந்த கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டார்.
விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் வடமலைக்குறிச்சி கிராமத்திலும், ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., ராஜபாளையம் அம்பேத்கர்நகரிலும், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு கடம்பன்குளம் கிராமத்திலும், பிற மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பல்வேறு கிராமங்களிலும் நடந்த கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டங்களில் 2,700 பெண்கள் உள்பட 5000 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. கிராமசபை கூட்டங்களில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க. அரசை நிராகரிக்க வேண்டுமென பேசியதுடன் அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கிராம மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளையும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்டறிந்தனர். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், கிராம மக்களிடம் தெரிவித்தனர்
நரிக்குடி அருகே சமத்துவபுரத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் ப.பா.போஸ்த் தேவர், கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், நவநீதன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, விவசாய அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசலி ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ராஜேஸ்வரி, காளீஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story