மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக பணமோசடி - சயான் ஆஸ்பத்திரி உதவி டீன் உள்பட 5 பேர் கைது


மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக பணமோசடி - சயான் ஆஸ்பத்திரி உதவி டீன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2020 3:00 AM IST (Updated: 24 Dec 2020 11:42 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த சயான் ஆஸ்பத்திரி உதவி டீன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சயான் ஆஸ்பத்திரியில் 28 வயதுயுடைய பெண் ஒருவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் எம்.டி. படிப்பதற்கு மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தரும்படி, அங்கு உதவி டீனாக பணியாற்றி வந்த டாக்டரிடம் முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்து இருந்தார். ஆனால் அவருக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் கொடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த டாக்டர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இதே பாணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் மகளுக்கு சயான் ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் சீட் பெற்று தருவதாக கூறி 4 பேர் சேர்ந்து அவரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சயான் ஆஸ்பத்திரி உதவி டீன் உள்பட 5 பேர் சேர்ந்து மருத்துவக்கல்லூரியில் அட்மிஷன் பெற்று தருவதாக கூறி பணமோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் நவிமும்பையில் பதுங்கி இருந்த 4 பேர் மற்றும் உதவி டீன் என 5 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 26 சிம்கார்டுகள், போலி ரப்பர் ஸ்டாம்புகள், சயான் ஆஸ்பத்திரி, கே.இ.எம், எம்.பி.டி. மருத்துவ கல்லூரியின் போலி அட்மிஷன் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் 30 டெபிட் கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மோசடி கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story