ஆன்லைன் மூலம் மருந்து வியாபாரம்: சென்னை தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி - நைஜீரிய ஆசாமி கைது


ஆன்லைன் மூலம் மருந்து வியாபாரம்: சென்னை தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி - நைஜீரிய ஆசாமி கைது
x
தினத்தந்தி 25 Dec 2020 2:23 AM IST (Updated: 25 Dec 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் மருந்து வியாபாரம் செய்வதாக சென்னை தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த நைஜீரிய ஆசாமி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கே.எம்.ஜோசப். தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத் என்பவர் எனக்கு முகநூல் மூலம் அறிமுகம் ஆனார். அவர் மருந்து கம்பெனி நடத்துவதாக தெரிவித்தார். ரத்தபுற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படும் போலிக் ஆயில் தேவைப்படுகிறது என்றும், இந்தியாவில் இருந்து அதை ஏற்றுமதி செய்தால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்றும் எலிசபெத் கூறினார்.

ஒரு முறை கப்பலில் ரூ.40 லட்சத்துக்கு போலிக் ஆயில் அனுப்பினால், ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்றும் அவர் சொன்னார்.

இது தொடர்பாக மும்பையில் செயல்படும் ஸ்டார் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு எலிசபெத் குறிப்பிட்டார். அதன்படி குறிப்பிட்ட ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுனிதா என்பவருடன் பேசினேன். அவர் ரூ.40 லட்சம் வைப்புத்தொகை செலுத்த சொன்னார். அதன்படி ரூ.40 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தேன். அதற்கு போலிக் ஆயில் தருவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி போலிக் ஆயில் எதையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை. அதன்பிறகு எலிசபெத் உள்ளிட்ட யாரும் செல்போனை எடுத்து பேசவில்லை. எலிசபெத் சொன்னது அனைத்தும் மோசடி நடவடிக்கை என்று தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இணை கமி‌‌ஷனர் தேன்மொழி, துணை கமி‌‌ஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமி‌‌ஷனர் சரவண குமார் ஆகியோர் மேற்பார்வையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக மும்பை சென்று சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அப்போது தொழில் அதிபர் ஜோசப்புடன் எலிசபெத் என்ற பெயரிலும், சுனிதா என்ற பெயரிலும் பெண் குரலில் பேசி மோசடி நடந்தது தெரியவந்தது. 7 பேர் கொண்ட மோசடி கும்பலால் இதுபோல் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் (வயது 27) என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவரை விமானத்தில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மேலும் 6 பேரை கைது செய்ய டெல்லி செல்வதற்கு தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story