300 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் சிக்கியது எப்படி?
300 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 போலீசார் உள்பட 6 பேர் சிக்கியது எப்படி? என்ற தகவல் தெரியவந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்,
திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். கடந்த 11-ந்தேதி திருவள்ளூரில் இருந்து மகேந்திர் மகன் ஆசிஸ் தனது கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமார் என்பவருடன் ஆட்டோவில் நகை விற்பனைக்காக சென்றார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்திமுனையில் ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து சம்பவம் தொடர்பாக உத்திமேரூர் அடுத்த மானாமதி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வரும் தமிழரசன், திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றும் கதிரவன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
2 போலீசார் உள்பட 6 பேர் சிக்கியது எப்படி? என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் சென்னை வியாசர்பாடி ரவுடி ரஞ்சித் என்பவரை சிறைக்கு அழைத்து சென்றபோது போலீஸ்காரரான தமிழரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழரசனுக்கு உல்லாசமாக இருக்க நிறைய பணம் தேவைப்பட்டது. அவரது நண்பரான திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் பகுதியில் ஒரு தங்க நகை கடையில் வேலை செய்து வந்தார்.
சந்தோஷ் சில நாட்களுக்கு முன் தமிழரசனை சந்தித்து தன் நகை கடை முதலாளி நகைகளை பாதுகாப்பு இல்லாமல் ஆட்டோவில் எடுத்து சென்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். முறையான பில் இல்லாமல் நகைகளை எடுத்து செல்வதால் அந்த நகைகளை கொள்ளையடித்தால் அவர்கள் போலீசில் புகார் அளிக்க வாய்ப்பில்லை என கூறியதால் தமிழரசன் அந்த நகைகளை தன் ரவுடி நண்பரான ரஞ்சித்தை வைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.
அதற்கு தமிழரசன் தனது நண்பரான திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ள போலீஸ்காரரான கதிரவனின் உதவியுடன் ரவுடி ரஞ்சித்தை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
கொள்ளையடித்த நகைகளை சந்தோஷின் சகோதரர் சுமிர் உதவியுடன் தஞ்சாவூரில் விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.
கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story