ஆன்லைனில் படிக்க கொடுத்த செல்போனில் நண்பரிடம் பேசியதை கண்டித்ததால் பாறைக்குழியில் குதித்து கோவை மாணவி தற்கொலை
ஆன்லைனில் படிக்க கொடுத்த செல்போனில் நண்பரிடம் பேசியதை கண்டித்ததால் கிணத்துக்கடவில் பாறைக்குழியில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் உதயம் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பலதா (36). இவர்களுடைய மகள் கோகிலாமணி (16). இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் கோகிலாமணி, தனது பெற்றோரின் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
கண்டிப்பு
இதை அறிந்த கோகிலாமணியின் அக்கா கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கோகிலாமணி நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போதுதான் தற்கொலை செய்யப்போவதாக கூறியபடி சென்றதாக தெரிகிறது. ஆனால் மாணவி மீண்டும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஏழுரில் இருந்து வடபுதூர் செல்லும் வழியில் தனியார் கல்லூரி அருகே ரோட்டோரம் உள்ள பாறைக்குழி நோக்கி கோகிலாமணி சென்றதாக கூறி உள்ளனர்.
உடல் மீட்பு
உடனே உறவினர்கள் சென்று பார்த்த போது பாறைக்குழியில் மாணவி பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பாறைக்குழியில் இறங்கி தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவி கோகிலாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story