தி.மு.க.வில் சேர வாய்ப்பு இல்லை; மதுரையில் 3-ந் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு; மு.க.அழகிரி பேட்டி


மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயாரை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது எடுத்த படம்.
x
மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயாரை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 25 Dec 2020 4:04 AM IST (Updated: 25 Dec 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வில் சேர வாய்ப்பு இல்லை. 3-ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட முடிவை எடுப்பேன் என்று மு.க.அழகிரி தெரிவித்தார்.

மு.க.அழகிரி
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கிறது. எல்லா கட்சிகளுமே தங்களது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இந்தநிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று சென்னை கோபாலபுரம் வந்தார். அங்கு தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து உடல் நிலை விசாரித்தார்.

பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

3-ந்தேதி மதுரையில் ஆலோசனை

கேள்வி:-சட்டசபை தேர்தலில் உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கும்?

பதில்:-என்னுடைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஓட்டு போடுவதும் ஒரு பங்களிப்பு தான். தேர்தலில் நிற்பதும் ஒரு பங்களிப்பு தான். தேர்தலில் வேலை பார்ப்பதும் ஒரு பங்களிப்பு தான். எனவே பொறுத்து இருந்து பாருங்கள். வரும் 3-ந்தேதி ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறேன். அந்த ஆலோசனையில் ஆதரவாளர்கள் என்ன கூறுகிறார்களோ, அதற்கேற்ப முடிவு எடுப்போம். அந்த முடிவுக்கு ஏற்ப நான் நடப்பேன்.

கேள்வி:-கட்சி தொடங்குவீர்களா?

பதில்:-3-ந்தேதி ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள் என்ன கூறுகிறார்களோ, அந்த முடிவை எடுப்பேன்.

தி.மு.க.வில் சேர வாய்ப்பு இல்லை

கேள்வி:-தி.மு.க.வில் இருந்து உங்களுக்கு ஏதாவது அழைப்பு வந்ததா?

பதில்:-அப்படி ஒன்றும் வரவில்லை.

கேள்வி:-தி.மு.க.வில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:-இல்லை, அது போன்ற வாய்ப்பு இல்லை.

கேள்வி:-31-ந்தேதி ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கிறாரே?
பதில்:-அது பற்றி எனக்கு தெரியாது. அண்ணாத்த பட சூட்டிங் ரத்து என்று பத்திரிகையில் பார்த்தேன். அதுமட்டும் தான் எனக்கு தெரியும்.


Next Story