லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அறையில் ரூ.1 லட்சம் சிக்கியது
சிவகங்கை நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்குவதாக புகார்
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும் நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் துணை இயக்குனராக நாகராஜன் பணிபுரிந்து வருகிறார்.
இந்த அலுவலகத்தில் மனைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குனர் கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமாரவேல், சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சென்றனர்.
ரூ.1 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவிடாமல் இருப்பதற்காக கதவுகளை பூட்டினார்கள். பின்னர் அலுவலகத்தில் இருந்த அனைவரது செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.
அதன்பிறகு துணை இயக்குனர் அறை உள்பட அனைத்து ஊழியர்களின் இருக்கைகள், மேஜைகளில் சோதனை செய்தனர். அப்போது துணை இயக்குனரின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக துணை இயக்குனர் நாகராஜனிடமும், அங்கு பணியாற்றியவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இரவு 8.30 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்றது. இந்த அதிரடி சோதனை சிவகங்கையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story