வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய குமாரசாமி, டி.கே.சிவகுமார் மீதான வழக்கு ரத்து - கமர்சியல் தெரு போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதாக குமாரசாமி, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 27, 28-ந் தேதிகளில் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதுபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், ஜனதாதளம் (எஸ்) தலைவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டில் மட்டும் தான் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த தொண்டர்கள், பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொண்டர்களை தூண்டியதாக டி.கே.சிவக்குமார், குமாரசாமி, பரமேஸ்வர் உள்ளிட்டவர்கள் மீது கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் தங்களது மீது போலீசார் பதிவு செய்து உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டி.கே.சிவக்குமார், குமாரசாமி, பரமேஸ்வர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அப்போது ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனால் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது சட்டவிரோதம் ஆகாது. இதனால் குமாரசாமி, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கமர்சியல் தெரு போலீசார் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story