‘8 வழிச்சாலை பணியை தொடங்கினால் அதை தடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
‘8 வழிச்சாலை பணியை தொடங்கினால் மறுநாளே அதனை தடுக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஈடுபடும்’ என்று அதன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
திருவண்ணாமலை,
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் முன்னெடுத்து கொண்டு செல்கிற வகையில் அவரது நினைவு நாளில் அவருக்கு மாலை அணிவித்து எங்களுடைய வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
பா.ஜ.க. அரசு மதவெறி கொள்கைகளை இந்தியாவில் வேகமாக அமலாக்கி வருகிறது. இதற்கு துணை போகும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் வைத்து நான் கூறிக்கொள்வது என்னவென்றால் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் எங்களுக்கு அனுமதி அளித்துவிட்டது என்றும், அதனை மீண்டும் தொடங்குவோம் என்றும் அரசு தரப்பில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 8 வழிச்சாலை பணியை தொடங்கினால் அடுத்த நாளே அதனை தடுக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கையில் எடுக்கும் என்று உறுதியாக தெரிவிக்கிறேன்.
ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்றுள்ள திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று பலர் அவரிடம் பேசி உள்ளனர். ஆனால் அன்று அவர் அரசியலுக்கு வரவில்லை. இன்று அவர் கட்சி ஆரம்பிக்க போகிறதாக முடிவை அறிவித்து உள்ளார். முடிவுபடி கட்சியை அறிவிப்பாரா? என்பது கூட கேள்வி குறியாகத் தான் உள்ளது. பா.ஜ.க.வின் கட்டாயத்தின் பேரில் தான் அவர் கட்சி ஆரம்பிக்கிறதாக சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story