வைகுண்ட ஏகாதசி விழா: நெல்லை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
x
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 26 Dec 2020 1:15 AM IST (Updated: 26 Dec 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் நேற்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி விழா
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களிலும் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவிலில் மாலை 5.30 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளி வந்தார். கொரோனா பரவலால் இந்த காட்சியை நேரடியாக பக்தர்கள் பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் சுவாமி அங்கு உள்ள ஒரு மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். பக்தர்கள் வரிசையாக வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.

நெல்லை பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

அம்பை மன்னார்கோவில்
இதேபோல் அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் ஆண்டாள் சமேத ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து பெருமாள் சயன கோலத்தில் தாயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடர்ந்து 5.30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உலா வந்தார். தொடர்ந்து பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பெரியநம்பி திருமாளிகை மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணவேணி, தக்கார் வெங்கடேஷ்வரன், கணக்கர் கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

அம்பை கிருஷ்ணசுவாமி கோவில், லட்சுமிநாராயண சுவாமி கோவில், புருஷோத்தமர் கோவில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

Next Story