சேதராப்பட்டு அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து கொள்ளை


சேதராப்பட்டு அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
x
தினத்தந்தி 26 Dec 2020 12:50 AM IST (Updated: 26 Dec 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

சேதராப்பட்டு அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காலாப்பட்டு,

சேதராப்பட்டு அடுத்த கரசூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. உழவர்கரை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும் கவியரசன் (வயது 28) என்ற மகனும் உள்ளனர்.

சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் கவியரசன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. இதனால் மகேஸ்வரி ஆரிய பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கருணாமூர்த்தியும் அவரது மனைவி விஜயாவும் தங்கள் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கவியரசன் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி கவியரசன் தனது வீட்டை பூட்டி விட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டார். மேல்தளத்தில் அவரது பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

கவியரசனின் தாயார் விஜயா காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், 1 லட்சம் ரொக்கம் திருடு போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து புகார் செய்ததன்பேரில் சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story