சட்டமன்ற பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு


சட்டமன்ற பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 26 Dec 2020 1:14 AM IST (Updated: 26 Dec 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டமன்ற பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை ஒயிட் டவுன் பகுதியில் கவர்னர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம் போன்றவை உள்ளன. புதுவையில் சமீப காலமாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி போராட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் என நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களின்போது போராட்டக்காரர்கள் கவர்னர் மாளிகை, சட்டசபையை முற்றுகையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு மாணவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திடீரென நடக்கும் இதுபோன்ற போராட்டங்களை தடுப்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் இதுபோன்று சம்பவங்கள் நடக்கும்போது கீழ்நிலை அதிகாரிகளை எச்சரிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கவர்னர் மாளிகை, சட்டமன்ற பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிப்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அகன்‌ஷா யாதவ், மகே‌‌ஷ்குமார் பர்ன்வால், ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது பாதுகாப்பினை பலப்படுத்த எங்கெங்கு தடுப்புகள் அமைப்பது, கூடுதல் போலீசாரை நியமிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனையும் நடத்தினார்கள்.

Next Story