தி.மு.க. நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் தடைவிதித்துள்ளனர்; பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி
தி.மு.க. நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதால் கூட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்
துரைமுருகன் ஆய்வு
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் உள்ள பொன்னை பகுதியில் உள்ள பொன்னை ஆற்று பாலம், சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயல் மழையால் சேதமடைந்தது. இதனை நேற்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் ஆதரவு பெருகுவதால்
கிராமசபை என்பது ஒரு கூட்டம். இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இல்லை. மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இருக்க வேண்டுமென்றால் அது மாவட்ட கலெக்டர் நடத்தும் கிராம சபை கூட்டம். தி.மு.க.வினர் கிராமசபை கூட்டம் நடத்தக்கூடாது என்றால், மக்கள் சபை கூட்டம் என்று சொல்லுவோம். தி.மு.க. நடத்திய இத்தகைய கூட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை பார்த்து அ.தி.மு.க.வினர் மிரண்டு போய் கிராமசபை கூட்டம் நடத்த கூடாது என்று கூறுகின்றனர்.
சீப்பை ஒளித்து வைத்துக்கொண்டால், கல்யாணம் நின்று போய் விடுமா? என்ற பழமொழிக்கேற்ப முதல்-அமைச்சர் பழனிசாமி நடந்து கொள்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தினால் வழக்கு போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். தி.மு.க.வினர் மிசா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பார்த்தவர்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கதிர்ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story