வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன; பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி


பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
x
பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
தினத்தந்தி 26 Dec 2020 1:51 AM IST (Updated: 26 Dec 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டம் குறித்தும், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்க கூட்டத்திற்கு திருப்பத்தூருக்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்பிரசாரம்
புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். வேளாண் சட்டத்தை கொண்டுவந்த மோடிக்கு புகழ்கிடைத்துவிடும் என்பதற்காக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

மோடி அரசு விவசாயிகள் நலன் காக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்களது விளை பொருடகளை, விலை கிடைக்கும்வரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள குளிர்பதன கிடங்குகள் கட்டப்பட உள்ளது. இந்தியாவிலேயே 3 மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலத்திலும் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள், 3 மாநிலத்தில் மண்டி நடத்தும் இடைத்தரகர்கள், அவர்களது ஆட்களை கூட்டி வந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தி.மு.க.வுக்கு தேர்தல்பயம்
தி.மு.க. கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் புதிய வேளாண் சட்டம் தேவை என கருணாநிதி தெரிவித்துள்ளார். தற்போது வேளாண் சட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார்.‌ தி.மு.க.வுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளது. எத்தனை தொகுதி என்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும். அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஹவுசிங் போர்டு பகுதியில் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி.சரவணன், பொதுச்செயலாளர் கண்ணன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story