கிருஷ்ணகிரியில் 29, 30-ந் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
கிருஷ்ணகிரியில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் தேசிய இளைஞர் விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு போட்டிகள்
மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சாமி விவேகானந்தரின் பிறந்த நாளை, தேசிய இளைஞர் விழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விழா எளிமையாக நடைபெற உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 15 வயது முதல் 29 வயது நிரம்பிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளலாம். முதல்நிலை போட்டிகள் மாவட்ட அளவில் மெய்நிகர் நடைமுறையில் (விர்ச்சுவல் மோடு) மட்டுமே நடைபெறும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
பயன் அடையலாம்
போட்டியாளர்கள் தங்களுடைய வீடியோ பதிவினை நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் வருகிற 29-ந் தேதி காலை 10 மணி முதல் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் போட்டியாளர்கள், மாநில போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாநில அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய தலைப்புகளில் நடைபெறும் இந்த போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தகுதியானவர்கள் பங்கேற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story