பள்ளிப்பட்டு போலீஸ் நிலையம் அருகே, லாரிகளுக்கு இடையே சிக்கி அப்பளமாக நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பள்ளிப்பட்டு அருகே இரு கரும்பு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு போலீஸ் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக இரு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளுக்கு இடையே கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கரும்பு ஏற்றி கொண்டு பின்னால் வந்த லாரி காரின் மீது வேகமாக மோதியது.
இதில் காரின் பின் பகுதி நசுங்கியது. மேலும் லாரி மோதிய வேகத்தில் நிலைத்தடுமாறி வேகமாக சென்ற கார், முன்னால் சென்று லாரியின் மீது இடித்தது. இதில் காரின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த மணி (வயது 50), அவரது மனைவி பரமேஸ்வரி (45), மகன் சந்தீப் (23), பரமேஸ்வரியின் தாயார் சுசீலா (65) உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இவர்கள் அனைவரும் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் உள்ள உறவினர்களைப் பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்ற நிலையில் விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே குமார ராஜூப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார் (30) என்பவரை பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story