மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
அம்மா மினி கிளினிக்
பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளிபாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பினால் ஏற்கெனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்க முதல்-அமைச்சர் உத்திரவிட்டுள்ளார். தற்போது பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும். ஏற்கனவே ரங்கராஜன் கமிட்டி பரிந்துரையின்பேரில் தான் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வழக்கை வாபஸ் பெறுக
மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்து இருந்தோம். ஆனால் தற்போது வரை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டனர். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் கேங்மேன் பணிகள் நிரப்பப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். கேங்மேன் தேர்வு எழுதி இருந்த தேர்வாளர்கள் தொழிற்சங்கத்தினரை சந்தித்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் தான் கேங்மேன் பணி நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் சட்டரீதியாக மின்சார வாரியம் செயல்பட்டு கேங்மேன் பணியிடங்கள விரைவில் நிரப்பப்படும்.
பரமத்திவேலூர் பகுதியில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்றால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்காலில் தனியார் யாரும் தண்ணீர் எடுத்து வணிக ரீதியில் விற்பனை செய்யப்படவில்லை. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க.வினர் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு குக்கிராமங்களில் கூட அம்மா மினி கிளினிக்குகளை திறந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அரசு திட்டங்களால் மக்கள் பயன்படுவதை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க.வினர் அரசியல் காரணங்களுக்காக நாடகம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story