கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாமக்கல், குமாரபாளையம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல், குமாரபாளையத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கிடையே நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கேக் வழங்கி ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் கிறிஸ்து அரசர் தேவாலயம் மற்றும் சேலம் சாலையில் உள்ள அசெம்பிளி ஆப் காட் சபையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்ததோடு, முககவசம் அணிந்து பங்கேற்றனர்.
திருப்பலி நிகழ்ச்சிகள்
இதற்கிடையே கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக திருப்பலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடில் முன்பாக கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தை ஏசுவை வணங்கி சென்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜன் நகரில் உள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயம், ஜடையம்பாளையம் புனித செபஸ்தியார் தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டியகயையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் வேதாந்தபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் நகரில் உள்ள கிறிஸ்தவ சபைகளிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story