தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2020 3:53 PM IST (Updated: 26 Dec 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கழிக்கவும், அங்குள்ள சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். அதன்படி தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தொடர் விடுமுறையையொட்டி மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து கொண்டு இருக்கின்றனர்.

இதனால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், பல்வேறு வகையான கள்ளி செடிகளை கண்டு ரசித்தனர்.

பின்னர் அலங்கார மற்றும் மலர் செடிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவை பார்வையிட்டனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். அங்கு மலர்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர். மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து சவாரி செய்து மகிழ்ந்தார்கள். அங்கு ஊட்டி ஏரியின் பின்னணியில் காட்சி மாடத்தில் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் நீலகிரியில் விளையும் பழங்கள் மற்றும் கைவினை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். படகு இல்லத்தில் குதிரை சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் தங்களது வாகனங்களை ஊட்டி-கூடலூர் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டி போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பண்டிகை காலங்கள் வர உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. இதனால் சீசன் இல்லாமலேயே ஊட்டி களை கட்டி உள்ளது.

Next Story