ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 15-ந் தேதி பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். நேற்று அதிகாலையில் கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவிலில் உள்ள சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதரை பக்தர்கள் தோளில் சுமந்துகொண்டு சென்றனர். பின்னர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி பெருமாள் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்றும், "கோவிந்தா... கோபாலா..." என்றும் பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் கோவிலுக்கு வெளியில் சப்பரத்தில் எழுந்தருளும் பெருமாள் திருவீதி செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்தப்படுவதால், திருவீதி உலாவுக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் கோவிலை சுற்றி வலம் வந்த பெருமாள் கமலவல்லி தாயார் சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த விழாவில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், கோவில் செயல் அதிகாரி ரமணிகாந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மூலவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சொர்க்கவாசல் திறப்பின்போது கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பக்தர்கள் காலை 6 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில் திரண்டு நின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், மூலவரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று கூறி அவர்களை புறப்பட்டு செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் பக்தர்கள் அங்கேயே நீண்டநேரம் நின்று கொண்டிருந்தனர். அதன்பிறகு அங்கிருந்தவர்களுக்கு மட்டும் மூலவரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான மூலவர் சன்னதியின் கதவு திறக்கப்பட்டதும், பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே சென்றார்கள். இதனால் அங்கிருந்த போலீசாரும், விழாக்குழுவினரும் பக்தர்களை வரிசையாக செல்லும்படி ஒழுங்குபடுத்தினார்கள்.
இதற்கிடையே கோவிலில் பெருமாளை தரிசனம் செய்வதற்காக அதிகாலை 4 மணியில் இருந்தே பக்தர்கள் தெப்பக்குளம் பகுதியில் திரண்டு இருந்தனர். ஆனால் ஆன்லைன் டிக்கெட்டில் உள்ள கியூ.ஆர். கோட்டை காலை 6 மணிக்கு பிறகே ஸ்கேன் செய்ய முடிந்தது. இதனால் 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் சென்றனர்.
கோவிலின் நுழைவு வாயிலில் அனைத்து பக்தர்களுக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்திருந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு சொர்க்கவாசல் வழியாக சென்ற பக்தர்கள், கமலவல்லி தாயாரை தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் கூடவில்லை.
பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள், கோவில் வளாகம் ஆகிய இடங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பார்வையிட்டார். அப்போது அவர், கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்கு முன்பு பக்தர்கள் கூடி நிற்க அனுமதிக்கக்கூடாது என்றும், கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story