நாகை அருகே, மீன் இறங்கு தளம் அமைக்கக்கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு மீனவா்கள் போராட்டம்
நாகை அருகே சாமந்தான்பேட்டையில் மீன் இறங்கு தளம் அமைக்கக்கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகப்பட்டினம்,
நாகை அருகே சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்றத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சா் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிப்பு வெளியிட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மீனவர்கள் சட்டமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து மீனவர்கள் சாமந்தான்பேட்டை கடற்கரையில் தீப்பந்தம் ஏந்தியும், கடலில் இறங்கியும், மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் நேற்று 5 நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்தனா்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை தாலுகா மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நாகை அக்கரைப்பேட்டையில் நடந்தது. இதில் சாமந்தான்பேட்டை மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை தாலுகா மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளத்தை அமைத்து தர தமிழக அரசு உடனயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story