ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்று தருவதாக மோடியின் பெயரை சொல்லி மூதாட்டியிடம் ரூ.1,000 மோசடி


ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்று தருவதாக மோடியின் பெயரை சொல்லி மூதாட்டியிடம் ரூ.1,000 மோசடி
x
தினத்தந்தி 26 Dec 2020 8:06 PM IST (Updated: 26 Dec 2020 8:06 PM IST)
t-max-icont-min-icon

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்று தருவதாக மோடியின் பெயரை சொல்லி மூதாட்டியிடம் ரூ.1,000 மோசடி செய்ததுடன் வங்கி வாசலில் அவரை காக்க வைத்துவிட்டு மாற்றுத்திறனாளி சென்றுவிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது64). இவரது கணவர் கலியமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் யாரும் இல்லாத நிலையில் பாப்பாத்தி சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் தெரிந்த வீடுகளுக்கு சென்று வீட்டுவேலைகளும் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுகாலை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள ஒரு கோவில் முன்பு 3 சக்கர ஸ்கூட்டரில் நின்ற மாற்றுத்திறனாளி ஒருவர், பாப்பாத்தியை அழைத்து பேசினார். ஏற்கனவே நீங்கள் ஓய்வூதியம் பெறுகிறீர்களா? என கேட்ட மாற்றுத்திறனாளி, மத்தியில் ஆளும் மோடி அரசு, வயதானவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதாகவும், அந்த ஓய்வூதிய தொகையை நாங்கள் பலருக்கு பெற்று கொடுத்து இருப்பதாகவும் கூறினார்

உங்களுக்கும் அந்த ஓய்வூதியத்தை பெற்று தருவதாக கூறினார். இதை உண்மையென நம்பிய பாப்பாத்தி, எனக்கு யாரும் இல்லாத நிலையில் மாதம் ரூ.2 ஆயிரம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இதற்காக ஆதார் அட்டை நகல், ஏற்கனவே ஓய்வூதியம் பெறக்கூடிய ஆவணத்தின் நகல் ஆகியவற்றை கேட்டுள்ளார். இவற்றை வீட்டில் இருந்து எடுத்து சென்று அந்த மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார். புகைப்படம் வேண்டும் என கேட்டபோது தன்னிடம் புகைப்படம் இல்லை என பாப்பாத்தி கூறியதால் தனது செல்போனிலேயே புகைப்படத்தை மாற்றுத்திறனாளி எடுத்து கொண்டார். பின்னர் வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டும் என கூறிய அவர், இந்த ஓய்வூதியம் பெற்று தர ரூ.1,000 வரை செலவு ஆகும் என தெரிவித்தார்.

வீட்டு வேலைகளை செய்து சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.1,000-த்தை அவரிடம் கொடுத்தார். இதை வாங்கி கொண்ட அந்த மாற்றுத்திறனாளி தனது ஸ்கூட்டரிலேயே பாப்பாத்தியை அழைத்து கொண்டு தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி அருகே உள்ள வங்கியின் முன்பு கீழே இறக்கிவிட்டார். நான் வங்கி கணக்கு புத்தகத்துடன் வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. 2½ மணிநேரத்திற்கு மேல் ஆகியும் அவர் வராததால் என்ன செய்வது என்பது தெரியாமல் பாப்பாத்தி தவித்தார்.

இது தொடர்பாக அந்த வழியாக வந்த சிலரிடம் கூறியபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என தெரியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இது குறித்து பாப்பாத்தி கூறும்போது, தஞ்சை கீழவாசல் பகுதியில் தனது அலுவலகம் இருக்கிறது என கூறியதால் நான் நம்பி ஏமாந்துவிட்டேன். ஆட்டுக்குட்டிகளுக்கு பால் வாங்குவதற்காக வைத்து இருந்த பணத்தை ஏமாற்றி வாங்கி சென்றுவிட்டார் என பரிதாபமாக தெரிவித்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, பெரியகோவில் சாலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கேமராக்களை ஆய்வு செய்தால் மூதாட்டியிடம் ஏமாற்றியவரை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இதேபோல் மத்தியஅரசு திட்டங்களை கூறி பலர் ஏமாற்றி வருவதாக அடிக்கடி புகார் வருவதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Next Story