உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்காள்-தம்பி பலி
உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்காள்-தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 35). இவருக்கு சமீரா(10) என்ற மகளும் யோகேஸ்வரன்(8) உள்பட 3 மகன்களும் உள்ளனர். இவர்களில் சமீரா அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும், யோகேஸ்வரன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் கால் கழுவுவதற்காக அருகே உள்ள குளத்துக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஸ்வரன் தவறி குளத்தில் விழுந்து மூழ்கினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சமீரா தம்பியை காப்பாற்றுவதற்காக தானும் குளத்தில் குதித்தாள். அப்போது தம்பியுடன் சேர்ந்து அவளும் தண்ணீரில் மூழ்கினாள்.
கால்கழுவி வரசென்ற தனது தங்கை, தம்பியை தேடி இவர்களின் அண்ணன் கணபதி(12) குளத்துக்கு சென்று பார்த்தான். அப்போது தண்ணீரில் மூழ்கி சமீராவும், யோகேஸ்வரனும் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே வீட்டுக்கு ஓடோடி வந்து தனது பெற்றோரிடம் தகவலை தெரிவித்தான். உடனே அவர்கள் கிராமமக்களுடன் குளத்துக்கு சென்று தண்ணீரில் மிதந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.
பின்னர் இரு குழந்தையின் உடல்களையும் கிராமமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி அக்காள், தம்பி பலியான சம்பவம் பாலி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story