கண்டமங்கலத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று கண்டமங்கலத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்,
கண்டமங்கலம் ஒருங்கிணைந்த ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காலை கண்டமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.ராமதாஸ், எல்.கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் 30 ஆண்டுகளாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இந்த கூட்டத்தை போல் எங்கேயும் பார்த்ததில்லை. குறிப்பாக அதிக அளவில் இளைஞர்களும், மகளிரும் கலந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நம்மிடையே இந்த ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் தொடர்ந்து இருக்குமேயானால் நம்மை யாராலும் வெல்ல முடியாது.
எதிர்க்கட்சியான தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. எதையாவது செய்து ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காணுகிறார்கள். அவர்களது கனவை தவிடு பொடி ஆக்குவது உங்களது கையில் உள்ளது. நமது ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளோம். அந்த திட்டங்களை மக்களிடையே நாம் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்ல வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களோ, விவசாயிகளோ, வியாபாரிகளோ பாதிக்கப்படவில்லை. நமது அரசின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதனை நீங்கள் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு பூத் நிர்வாகிகளும் அந்தந்த பகுதி வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஒரு வாக்காளர் கூட விடக்கூடாது. யாரையும் குறைத்து எடை போடாதீர்கள். வெற்றி முக்கியம். தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும். அது உங்களது கையில்தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவர்கள் கோ.ஏழுமலை, வி.ஏழுமலை, ஒன்றிய பேரவை செயலாளர் எம். எஸ்.ஆர்.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் சீதாராமன், காமாட்சி, கலைவாணி, துரைக்கண்ணு, சி.ஆர்.ஏழுமலை, மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி ராமச்சந்திரன், கண்ணகி ராஜன், மணிவேல், பொருளாளர்கள் ஜெயமூர்த்தி, பாலு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் வேலு, மாணவரணி துணை செயலாளர் முருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், மாணவரணி செயலாளர் ராஜசேகர், விவசாய அணி செயலாளர் குமரேசன், பாசறை செயலாளர் சுகுமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சேதுபதி, மகளிர் அணி செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்டமங்கலம் கிளை செயலாளர் வேலு நன்றி கூறினார்.
கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, வானூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நன்றி தெரிவிப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நீண்டகால கோரிக்கையான சி.கள்ளிப்பட்டு, தளவானூர் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு நன்றி தெரிவிப்பது, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story