தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது - மரக்காணத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது.
இந்த கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தடைபோட்டிருக்கிறது. இதற்குச் சேரும் கூட்டத்தை பார்த்து அவர் பயந்து போயிருக்கிறார். இனி மக்கள் கிராமசபை கூட்டமாக இதை நடத்துகிறோம். இதை தி.மு.க.வின் சார்பாக நடத்துகிறோம். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் கிராமசபை கூட்டமாக இதனை நடத்துகிறோம்.
விரைவிலேயே நாம் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இடையில் இன்னும் 4 மாதங்கள்தான் உள்ளன. இந்தத் தேர்தலில் நாமெல்லாம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் எல்லாம் ஒன்று திரண்டு வந்து இருக்கிறீர்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வரப்போகிறது, தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதில் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, நீங்கள்தான் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன்.
இந்த மக்கள் கிராமசபை கூட்டத்தை தொடங்கிய முதல் நாளில் மட்டும் 30 லட்சம் பேர், நேற்று 35 லட்சம் பேர் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் 40 லட்சம் பேர் வருவார்கள். இணையத்தின் வழியாக ஒரு கோடியே 80 லட்சம் பேர் கிராம, வார்டு சபைக் கூட்டத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பேரை கடந்து, 2-வது நாளில் 2 கோடியே 58 லட்சம் பேரை கடந்து வந்திருக்கிறது. இது 10 நாள் நடக்கப்போகிறது.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது அ.தி.மு.க. ஆட்சி. நேற்று இரவு ஒரு 8 மணி அளவில் இதற்குத் தடை போட்டார்கள். நான் 9 மணிக்கு ‘நீங்கள் தடை போட்டாலும் அதையும் மீறி நாங்கள் நடத்துவோம்’ என அறிவித்தேன். கிராமசபை என்ற பெயரில் நடத்தினால் குழப்பம் வரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
ஆனால் அதற்காக நாங்கள் விட்டுவிட மாட்டோம். மக்கள் கிராமசபை கூட்டம் என்ற தலைப்பில் நடத்துவோம். அதற்கும் தடை போட்டீர்கள் என்றால் அதையும் தாண்டி நடத்துவோம். அதை நீங்கள் தடுக்க முடியாது. யாராலும் தடுக்க முடியாது. மோடியே வந்தாலும் சரி, இதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டினுடைய கவர்னரை சந்தித்தோம். அப்பொழுது 97 பக்கம் கொண்ட ஒரு ஊழல் புகார் கொடுத்தோம். இந்த ஆட்சியின் மீது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களாக இருக்கக்கூடிய தங்கமணி, வேலுமணி, உதயகுமார், காமராஜ், இப்படி எல்லா அமைச்சர்கள் மீதும் புகார் கொடுத்து இருக்கிறோம். ஆதாரத்தோடு, முழுவிவரத்தோடு புகார்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தமுறை கவர்னர் நம்மை தெளிவாக புரிந்துகொண்டார். ஏனென்றால், அவருக்கு தெரிகிறது. 4 மாதங்களில் ஆட்சிமாற்றம் வரப்போகிறது என்பது அவருக்கும் தெரிந்திருக்கிறது. நமக்கே தெரிந்து இருக்கும் போது அவர்களுக்கு தெரியாதா? அவருக்கும் தெரிந்துவிட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்.
நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பொறுத்துக் கொள்ளுங்கள். 4 மாதங்களில் நாம் நடவடிக்கை எடுப்போம். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களை சந்திக்கிற கட்சி. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை.
ஆட்சியில் இல்லாத நேரத்தில் நாம் என்ன ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோமா? அரசியலில் இருந்து துறவறம் சென்றுவிட்டோமா? நாம் தான் பொறுப்பில் இல்லை, ஆட்சியில் இல்லையே, மக்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று இருந்தோமா? மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தோம். விவசாய பிரச்சினையா, குடிநீர் பிரச்சினையா, சாலை வசதிகளா, மொழி பிரச்சினையா, எல்லா பிரச்சினைகளையும் கையில் எடுத்தோம். அதேபோல் ‘நீட்’ பிரச்சினை வந்தபோதும் அதையும் கையில் எடுத்தோம்.
தொடர்ந்து 10 வருடமாக இதுபோல மக்கள் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தி.மு.க. தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் இணைந்து ஒற்றுமையாக இருந்து எப்படி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி அமைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது போல் சட்டமன்ற தேர்தலில் அதைவிட ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிட நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story