மாவட்டத்தில் 7¼ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - இன்று முதல் டோக்கன் வினியோகம்


மாவட்டத்தில் 7¼ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - இன்று முதல் டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 26 Dec 2020 3:49 PM GMT (Updated: 26 Dec 2020 3:49 PM GMT)

மாவட்டத்தில் 7¼ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (சனிக்கிழமை) முதல் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

கடலூர், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கும் ரொக்கமாக ரூ.2 ஆயிரத்து 500 நிதி உதவி, பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய தொகுப்பு அனைத்து ரே‌‌ஷன் கடைகள் மூலமாக வருகிற 4-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 7 லட்சத்து 33 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் 433 குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் இந்த பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்காக முற்பகலில் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் நாள் மற்றும் தேதி குறிப்பிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) வரை வீடு, வீடாக சென்று ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வினியோகம் செய்கிறார்கள்.

முற்பகல் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகல் வந்தாலும் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும். விற்பனை முனைய எந்திரத்தின் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும். பரிசு தொகுப்பு பெற்றுக்கொண்டதற்கான உரிய ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் செய்து குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பயன் அடையலாம்.

இந்த பரிசு தொகுப்பு வருகிற 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ரே‌‌ஷன் கடைகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்கப்படும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசைகளில் நின்று சிரமம் இன்றி பொருட்களை பெற்றுச்செல்ல வேண்டும். முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கத்தொகை வினியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், அதை தீர்வு செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும், மாவட்ட, வட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையை 04142-230223 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000209 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வட்ட அளவில் கண்காணிப்பு அலுவலராக கடலூருக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம்- 9486529140, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல்- 9445000209, சிதம்பரத்திற்கு தாட்கோ மாவட்ட மேலாளர் கற்பகம் -9445029458, புவனகிரிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னே‌‌ஷ்வரன் 9445477830, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமு‌‌ஷ்ணத்திற்கு முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ஜெயக்குமார்- 9952712551, விருத்தாசலத்திற்கு கெம்ப்பிளாஸ்ட் வடிப்பக அலுவலர் ஞானவேல் -9080840810, திட்டக்குடி, வேப்பூருக்கு கலால் உதவி ஆணையர் லூர்துசாமி -8072076912 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவர்களின் கீழ் நடமாடும் குழு அலுவலர்கள் மற்றும் தாசில்தார் ஒருவருடன் 10-15 ரே‌‌ஷன் கடைகளை துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 20.12.2020 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story