9 மாதங்களாக பூட்டப்பட்டுள்ள பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்கா திறக்கப்படுமா?
9 மாதங்களாக பூட்டப்பட்டுள்ள பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.41.20 லட்சம் மதிப்பில் சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவில் சிறுவர்-சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கல் உபகரணம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்களும் உள்ளன.
பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் இந்த சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு தான் பெரம்பலூர் பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அருங்காட்சியகம், பூங்காக்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவும் மூடப்பட்டது.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகம், பூங்காக்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரம்பலூரில் சிறுவர் அறிவியல் பூங்கா மட்டும் திறக்கப்படாமலேயே கடந்த 9 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெற்றோருடன் வரும் சிறுவர்-சிறுமிகள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறுவர்-சிறுமிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.
Related Tags :
Next Story