மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்


மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Dec 2020 10:13 PM IST (Updated: 26 Dec 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் உள்ள பண்டரிநாதன் சுவாமி பஜனைமடத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 

கரூர் ஜவகர்பஜாரில் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான பண்டரிநாதன் சுவாமி பஜனை மடம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவ நிகழ்ச்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத்தில் பண்டரிநாதன் அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு பண்டரிநாதன் சேவை சாதித்தார். நேற்று ராப்பத்து நிகழ்ச்சியின் தொடக்கத்தையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடந்தது. இதையொட்டி கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் பண்டரிநாதனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அதிகாலை 4.45 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்கப்பட்டு, சொர்க்கவாசலை நோக்கி பல்லக்கில் பண்டரிநாதன் வந்தார். அப்போது சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டதும் அவர் அதனை கடந்து சென்றார். இதனை கண்ட பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்கிற கோஷத்தை எழுப்பி வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பண்டரிநாதன் வீதியுலா வந்தார். மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளிய பண்டரிநாதனுக்கு துளசியை படைத்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு, சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.

கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இக்கோவிலில் இந்த ஆண்டு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெறவில்லை. இருந்தபோதிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, ரெங்கநாதசுவாமியை தரிசனம் செய்து சென்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரத்துவத்துடன் நோய் நொடியின்றி வாழவும், மழை வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவில் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாள் ஆகிய இரண்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்புபூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த 2 கோவில்களிலும் நேற்று காலை பரமபத வாசல் திறக்கப்பட்டதும், முதலில் உற்சவ பெருமாள் பரமபத வாசல் வழியாக சென்ற பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். கொரோனா நோய்பரவலை தடுக்கும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்து நீண்டவரிசையில் ஒருவர் பின் ஒருவராக நின்று சாமிதரிசனம் செய்தனர். மேலும் தாங்கள் கொண்டுவந்த துளசி, தேங்காய், வாழைப்பழங்கள் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

புன்செய் தோட்டக்குறிச்சி, மேல்ஒரத்தை சேங்கமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு புனித நீரால் நீராற்றப்பட்டது. பின்னர் பால், தயிர், இளநீர், மஞ்சள்குங்குமம், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. அதிகாலை 5 மணி அளவில் கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் பல்லாக்கில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்தார். அங்கு திரண்டுயிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டையில் மிகவும் புகழ்பெற்ற பாவ நாராயணன் கோவில் உள்ளது. இக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானத்தில் உள்ள பாவா நாராயணன், பத்மாவதி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story