அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆட்டோ சங்க பெயர் பலகை-கொடி கம்பம் அகற்றம் - மாநகராட்சி அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை


அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆட்டோ சங்க பெயர் பலகை-கொடி கம்பம் அகற்றம் - மாநகராட்சி அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Dec 2020 10:24 PM IST (Updated: 26 Dec 2020 10:24 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆட்டோ சங்க பெயர் பலகை-கொடி கம்பத்தை அகற்றியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை, 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் நேற்று அவற்றை அகற்றி எடுத்து சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள் நேற்று மதியம் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

இதில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பொதுச்செயலாளர் மணிகண்டன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் தன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முறையாக அனுமதி கடிதம் எழுதி மாநகராட்சியில் கொடுத்தால் அனுமதி வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கோட்டை போலீசார் நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Next Story