முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? பா.ஜ.க. நிலைப்பாடு குறித்து ஜே.பி.நட்டாதான் அறிவிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? பா.ஜ.க. நிலைப்பாடு குறித்து ஜே.பி.நட்டாதான் அறிவிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2020 4:00 AM IST (Updated: 27 Dec 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என ஜே.பி.நட்டாதான் அறிவிக்கவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 16-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை காசிமேடு கடற்கரையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், படகில் சென்று கடலில் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பா.ம.க. உள்பட எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து இருப்பார்கள். அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் கிடையாது. கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும். ஆனால் தி.மு.க.வில் வாரிசு அரசியல் செய்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கின்றபோது மெகா கூட்டணியோடு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்.

சீமான் வாங்கும் 3 சதவீத வாக்கும் குறைந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்.

தமிழகம் வரும் பா.ஜ.க. தலைவர்கள், தங்கள் கட்சியினரை உற்சாகப்படுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து ஆயிரம் கருத்துகளை தெரிவிப்பார்கள். அதற்கெல்லாம் நாங்கள் மதிப்பு அளிக்க முடியாது. பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து அதன் தலைவர் ஜே.பி.நட்டாதான் அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காசிமேட்டில் சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் அமைதி பேரணி அ.தி.மு.க அவைத் தலைவர் இ.மதுசூதனன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடந்தது. முன்னதாக சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு எஸ்.என்.செட்டி சாலையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரணியாக கடற்கரைக்கு சென்று கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் கே.குப்பன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தியதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன் தலைமையில் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி, மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் இருந்து தலையில் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று திருச்சினாங்குப்பம் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றி, மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கே.வி.கே. மீனவ கிராமத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அதன் நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தலைமையில் அக்கட்சியினர் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே கடலில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story