சுரண்டையில் புதுப்பெண் கொலை: தலைமறைவான கணவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
சுரண்டையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான கணவரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பெண் கொலை
சுரண்டை அருகே உள்ள உச்சிபொத்தையைச் சேர்ந்தவர் வேல்சாமி மகள் பூங்கோதை (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோகிந்தரை (27) காதலித்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் 2 பேரும் சுரண்டை கோட்டை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகிந்தர் கடந்த 24-ந்தேதி மனைவி பூங்கோதையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜோகிந்தர் தப்பி சென்றார்.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ஜோகிந்தரை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கோகுல கிருஷ்ணன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜோகிந்தர், கோவையில் உள்ள தன்னுடைய நண்பர்களின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
Related Tags :
Next Story