இந்துக்களின் விரோதி கவர்னர் கிரண்பெடி: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
இந்துக்களின் விரோதியாக கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சனிப்பெயர்ச்சி விழா
திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவுக்கு வருவார்கள். சனிப்பெயர்ச்சி விழா தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும். புதுவையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக ஆலயங்களில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சனிப்பெயர்ச்சி விழாவினை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை நடத்தக் கூடாது என்று ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே ஆகம விதிப்படி விழா கொண்டாடப்படுவதாக காரைக்கால் கலெக்டர் கோர்ட்டில் பதில் அளித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
ஆனால் கவர்னர் கிரண்பெடி இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக்கொண்டு விழாவினை நடத்தக் கூடாது என்று வாதிட்டார். ஒரு மாநிலத்தின் கவர்னர் மாநில அரசின் முடிவினை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றது இதுதான் முதல்முறை.
இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று புதுச்சேரி கலெக்டரும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் சுப்ரீம் கோர்ட்டின் சில விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்தோம்.
அப்போது நிகழ்ச்சிகளை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஓட்டல் நிர்வாகிகளை அழைத்துப்பேச உள்ளோம். புதுவை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட எந்தவித தடையும் இல்லை.
தரம்தாழ்ந்த செயல்
முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் விதிக்கப்படும் தடைகளை புதுவையில் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. நமது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இது சுற்றுலா மாநிலம்.
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய எனக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் கடிதம் எழுதியுள்ளேன்.
விளையாட்டில் மேட்ச்பிக்சிங் என்பதுபோல் சிலரிடம் புகார்களை கொடுக்க கவர்னர் சொல்கிறார். எனக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக மீம்ஸ் போட சொல்கிறார். இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகிறார்.
இந்து விரோதி
சனிப்பெயர்ச்சி விழாவுக்கு 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்பே கொரோனா பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என்று சொல்லி இருந்தால் அதற்கு தயாராக இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது சான்றுவேண்டும் என்கிறார். கோர்ட்டு இதில் தலையிட்டதால் நாங்கள் தலையிடவில்லை. எங்களை பொறுத்தவரை கொரோனா சான்றிதழ் தேவையில்லை. ஏனெனில் கோவில் வாசலிலேயே அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி விழாவினை கவர்னர் தடுத்து நிறுத்த காரணம் என்ன? இந்து விரோதியா? அவர் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார். இந்து மதத்தை பாதுகாப்பதாக கூறும் ஒரு சில அரசியல் கட்சிகள் இப்போது வாய்மூடி உள்ளன. மதச்சார்பற்ற அணியில் உள்ள நாங்கள் அதை எதிர்த்து போராடுகிறோம்.
மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்துக்கள் சனி பகவானை கும்பிடக்கூடாது என்று இந்து மத விரோதியாக கவர்னர் செயல்படுகிறார். அவரால் காரைக்காலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைக்கு கவர்னர்தான் பொறுப்பு. கவர்னரின் செயல்பாட்டை பாரதீய ஜனதா ஏற்கிறதா? இந்து சமுதாயத்தை இழிவுபடுத்திய கவர்னர் கிரண்பெடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story