பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை உற்சவம்


பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் துவாதசி ஆராதனை உற்சவம்
x
தினத்தந்தி 27 Dec 2020 4:57 AM IST (Updated: 27 Dec 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, இரவில் மேளதாளம் முழங்க சுவாமி கம்பத்து ஆஞ்சநேயர் திருச்சுற்று உலா நடந்தது.

இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நேற்று காலை துவாதசி ஆராதனை உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ பெருமாளுக்கு வைகுண்டநாதர் கோலத்தில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. மூலவருக்கு திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் செய்யப்பட்டு, கம்பத்து ஆஞ்சநேயருக்கு பித்தளை கவசமும், மரகதவல்லித்தாயாருக்கு வெள்ளிக்கவசமும் அணிவிக்கப்பட்டது.

கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருத்தலத்தின் அர்ச்சகர் திருவிக்ரமன் பட்டாச்சாரியார் ஆகியோர் அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்தனர். துவாதசி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டு, தங்களது ஏகாதசி விரதத்தை முடித்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் அடையும் விழாவும், ராப்பத்து உற்சவ நிறைவும் வருகிற(ஜனவரி) 3-ந்தேதி நடைபெறுகிறது. அன்று இரவு சொர்க்கவாசல் மீண்டும் மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Next Story