கிண்டியில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கிண்டி எம்.கே.என்.சாலை- ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ராஜேஷ் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது28). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஊரில் இருந்து வரும் சித்தியை அழைத்து வர நேற்று அதிகாலையில் பிரவீன்குமார் தனது காரில் கோயம்பேடு சென்றார். கிண்டி எம்.கே.என்.சாலை- ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் கார் வந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார், உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
அதற்குள் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக பரங்கிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story