பெங்களூருவில் மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து - ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
பெங்களூரு,
பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஷிர்கே அடுக்குமாடி குடியிருப்பின் அருகே, கிக்-அவுட் என்ற பெயரில் மதுபான விடுதி மற்றும் உணவகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் வந்து சென்றதும் மதுபான விடுதி, உணவகத்தை அடைத்துவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் உணவகம் மற்றும் மதுபான விடுதியில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் உணவகம், மதுபான விடுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் தீ விபத்து குறித்து தெரியாமல் போனது. இதனால் தீ மளமளவென வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் தீ விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் உணவகம் மற்றும் மதுபான விடுதியில் பிடித்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் உணவகம் மற்றும் மதுபான விடுதியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி விட்டன.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story