சிர்சியில், காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல் - தாய் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
சிர்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்திய தாய் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கார்வார்,
உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி டவுன் பசவேஸ்வரா நகரை சேர்ந்தவர் மாணிக்கநந்தா. இதுபோல சிர்சி டவுனில் வசித்து வரும் ரூபாவின் மகள் ருத்திகா. ரூபா, சிர்சி டவுனில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அழகு நிலையத்தை ருத்திகாவும் கவனித்து வந்தார். அந்த அழகு நிலையம் அருகே உள்ள கடைக்கு மாணிக்கநந்தா அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இதனால் மாணிக்கநந்தாவுக்கும், ருத்திகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலையும் வளர்த்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் ருத்திகாவின் காதல் விவகாரம் அவருடைய குடும்பத்தினருக்கு தெரியவந்தது. மாணிக்கநந்தா வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு ருத்திகாவின் தாய் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ருத்திகா வீட்டைவிட்டு வெளியேறி மாணிக்கநந்தாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ருத்திகா தனது காதல் கணவருடன் அவரது வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ருத்திகா, மாணிக்கநந்தா மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு காரில் வந்த ருத்திகாவின் தாய் ரூபா மற்றும் 3 வாலிபர்கள் சேர்ந்து ருத்திகாவை தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினர்.
இதனை தடுக்க முயன்ற மாணிக்கநந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’யை அடித்தனர். இதனால் அவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் காரில் ருத்திகாவை அவரது தாய் மற்றும் 3 வாலிபர்கள் கடத்தி சென்றனர். இதுகுறித்து மாணிக்கநந்தா அளித்த புகாரின்பேரில் சிர்சி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் ரூபா உள்பட 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story