விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


அத்திகோவில் பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை வேரோடு காட்டு யானை சேதப்படுத்தியது
x
அத்திகோவில் பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை வேரோடு காட்டு யானை சேதப்படுத்தியது
தினத்தந்தி 27 Dec 2020 7:04 AM IST (Updated: 27 Dec 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்துள்ளது.

விவசாய நிலங்கள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அத்தி கோவில், கான்சாபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன.

அங்கு தென்னை, மா சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக யானைகள் தோப்புக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள், மரங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

யானைகள் அட்டகாசம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோப்பில் புகுந்த யானை தென்னை, மா மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

எங்களது விளை நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. யானைகளுக்கு மலைப்பகுதிகளில் தண்ணீர் கிடைக்காததால் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் தென்னை, மா மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து விட்டு செல்கின்றன.

நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்குவதுடன், யானைகளின் தாக்குதலில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story