விதிமீறும் வாகனங்களால் விபத்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?


விதிமீறும் வாகனங்களால் விபத்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 27 Dec 2020 7:37 AM IST (Updated: 27 Dec 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே விதி மீறும் வாகனங்களால் விபத்து அபாயம் இருப்பதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது. காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. வாகனங்கள் நாலாபுரமும் சென்று வருவதால் அடிக்கடி விபத்து சம்பவங்களும் அரங்கேறுகிறது.

குறிப்பாக திருச்சி-மதுரை ரோட்டில் மரக்கடையில் இருந்து ராமகிருஷ்ணா மேம்பாலம் வரை செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் ராமகிருஷ்ணா மேம்பாலத்தில் இருந்து ஒருவழிப் பாதையில் இறங்கி வரும் வாகனங்கள், பாலத்தின் இரு புறங்களில் உள்ள அணுகு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், காந்திமார்க்கெட்டில் இருந்து மரக்கடை வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் இவை அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமித்து கொள்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த விபத்து பகுதியாக மாறி வருகிறது.

வேகத்தடை

மேலும், அங்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையமும் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வரும் பெண்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி காயமடைந்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பலர் விபத்தில் சிக்கி உள்ளனர். ஆகவே அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story