மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க வீடு,வீடாக டோக்கன் வினியோகம்
மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது. ரேஷன்கடையில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள், கரும்பு துண்டு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பண்டிகைக்கு பொங்கல் பொருட்களுடன், முழு கரும்பு மற்றும் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ரேஷன்கடைகளில் பொங்கல் பொருட்கள், ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 6¼ லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன்கார்டுகளுக்கு 1,035 ரேஷன்கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ரேஷன்கடைகள் மூலம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் தினமும் 100 பேருக்கு பொருட்கள் வழங்கும் வகையில் தேதி, நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். ஆனால், ஒருசில பகுதிகளில் மக்கள் ஆர்வமிகுதியில், டோக்கன் வாங்குவதற்காக ரேஷன்கடைகளில் குவிந்தனர். அதிலும் சிலர் காலை 8 மணிக்கே ரேஷன்கடைகளுக்கு வந்தனர். அவ்வாறு ரேஷன்கடைகளுக்கு வந்த மக்களை, ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். மேலும் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என்று அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று அய்யலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்குவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ரேஷன்கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் ரேஷன் கடை முன் திரண்டனர். அப்போது ரேஷன் கடை ஊழியர்கள் இன்று சமையல் எண்ணெய் மட்டுமே வழங்கப்படும், பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படாது என்று கூறினர்.
இதனால், பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதி வாரியாக பொருட்கள் வினியோகம் செய்யப்படும் தேதியை எழுதி வைக்குமாறு ரேஷன் கடை ஊழியர்களை பொதுமக்கள் அறிவுறுத்தி் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story