விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்க 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி


விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்க 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி
x
தினத்தந்தி 27 Dec 2020 7:57 PM IST (Updated: 27 Dec 2020 7:57 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்குவதற்காக 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவை அந்தந்த ரே‌‌ஷன் கடைகளில் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. இதில் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இவற்றை காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் எந்தெந்த நாட்களில் எந்தந்த நேரத்தில் கடைகளுக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணியை முடிப்பதற்கான ஏற்பாட்டில் குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், மரக்காணம், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்களில் உள்ள 1,254 ரே‌‌ஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 951 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் நேற்று முதல் குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் அந்தந்த ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை, தாயுமாணவர் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாலகிரு‌‌ஷ்ணன் தெரு உள்ளிட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் விழுப்புரம் குடிமைப்பொருள் தனி தாசில்தார் கோவிந்தராஜ், தனி வருவாய் ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story