ஆவடியில் ஓடஓட விரட்டி கல்லூரி மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


கல்லூரி மாணவர் தயாளன்.
x
கல்லூரி மாணவர் தயாளன்.
தினத்தந்தி 28 Dec 2020 1:48 AM IST (Updated: 28 Dec 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் கல்லூரி மாணவரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்
ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தயாளன் (வயது 20). இவர், சென்னையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று மாலை தனது வீட்டின் அருகே 37-வது தெருவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் தயாளனை சுற்றி வளைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாளன், அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் இடதுபக்க கழுத்தில் பலத்தவெட்டு விழுந்தது. மேலும் இடது கை மணிக்கட்டு, தலை ஆகிய பகுதிகளிலும் சரமாரியாக வெட்டியதால் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் தயாளனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தயாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான் கல்லூரி மாணவர் தயாளனை எதற்காக வெட்டினர்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கல்லூரி மாணவரை ஓடஓட விரட்டி அரிவாளால் மர்மகும்பல் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story