கர்நாடகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.441 கோடி நிதி விடுவிப்பு; மந்திரி சுரேஷ்குமார் தகவல்
கர்நாடகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.441 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் வருகை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒதுக்க வேண்டிய நிதியை சரியான முறையில் வழங்கவில்லை என்று சில தனியார் பள்ளிகள் கூறியுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இதை கர்நாடகத்தில் கடந்த 2012-13-ம் ஆண்டு அமல்படுத்தினோம். அதன்படி தகுதி வாய்ந்த ஏழை குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களுக்கு உரிய கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
ஓராண்டு முடிவடைந்த பிறகு அந்த குழந்தைகளின் வருகையை அடிப்படையாக கொண்டு அந்தந்த தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை அரசு வழங்குவது வாடிக்கை. கடந்த 2012-13-ம் ஆண்டில் இதுவரை கர்நாடகத்தில் 5.35 லட்சம் குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். அவர்களின் கல்வி கட்டணமாக அரசு ரூ.2, 372 கோடியை செலுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், பாக்கி இருந்த ரூ.550 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
ரூ.441 கோடி
அதில் 80 சதவீத நிதியை அதாவது ரூ.441 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு டிசம்பர் மாதத்திற்குள் 80 சதவீத கட்டணத்தை வழங்கியது கிடையாது. ஆயினும் நான் தீவிர முயற்சி மேற்கொண்டு, தனியார் பள்ளிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதனால் அரசு, கல்வி கட்டண நிதியை விடுவிக்கவில்லை என்று கூறுவது தவறானது.
இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story