குருப சமுதாயத்தை 2 ஆக பிரிக்க சதி நடக்கிறது; சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டு


முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா
x
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா
தினத்தந்தி 27 Dec 2020 10:58 PM GMT (Updated: 27 Dec 2020 10:58 PM GMT)

குருப சமுதாயத்தை 2 ஆக பிரிக்க சதி நடப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா
மைசூரு மாவட்டத்தில் நேற்று 2-வது கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தனது சொந்த கிராமமான வருணா தொகுதிக்கு உட்பட்ட சித்தராமன உண்டி கிராமத்திற்கு தன்னுடைய மனைவியுடன் சென்று வாக்கை செலுத்தினார். ஓட்டுப்போட்ட பின் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலித் மக்களின் தலைவரும், தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்து வரும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, கர்நாடக முதல்-மந்திரி பதவி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது உண்மைதான். அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வந்தது. ஆனால் அவருடைய பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல.

முதல்-மந்திரி பெயர் பட்டியல்
அவருடைய பெயர் முதல்-மந்திரி பெயர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டதற்கு நான்(சித்தராமையா) தான் காரணம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு யார் காரணம் என்று தேவேகவுடாவுக்கு தெரிந்தால் அவர் பகிரங்கமாக அதைப்பற்றி வெளியே சொல்லலாம். இதுதொடர்பாக அவர் என்னிடம் விவாதிக்க முடியுமா?. இந்த சவாலை அவர் ஏற்றுக் கொள்வாரா?.

நான் ஜனதா தளம்(எஸ்) கட்சியை உருவாக்கவில்லை. ஆனால் அந்த கட்சியை வளர்க்கவும், வலுப்படுத்தவும் பாடுபட்டு இருக்கிறேன். 1999-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவராக நான் பணியாற்றி இருக்கிறேன். அந்த சமயத்தில் கட்சியை வளர்த்தது யார்?, கட்சியை பாதுகாத்து வலுப்படுத்தியது யார்? என்று தேவேகவுடாவுக்கே தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னைப்பற்றி அவதூறாக பேசுவது சரியல்ல.

போராட்டம் தேவையற்றது
தேவேகவுடா பாவம். அவர் பற்றி பேசக்கூடாது. அவரது பேச்சுக்கு பதில் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி கர்நாடகத்தில் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து வலுப்பெற்று இருப்பதற்கு யார் காரணம் என்று தேவேகவுடாவே பதில் சொல்லட்டும். வருகிற 29-ந் தேதி(நாளை) மைசூருவில் குருப சமுதாயத்தை எஸ்.டி. பிரிவில் இணைக்க வேண்டும், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி ஜனதா தளம்(எஸ்) மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தேவையற்றது. இந்த போராட்டம் குருப சமுதாயத்தை 2 ஆக பிரிக்க நடத்தப்படும் சதி ஆகும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது குருப சமுதாயத்தை பற்றி குல சாஸ்திர ஆராய்ச்சி நடத்த முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்போது குருப சமுதாயத்தைச் சேர்ந்த ஈசுவரப்பா, எச்.விஸ்வநாத் உள்ளிட்டோர் பா.ஜனதாவில் இணைந்து அரசியல் செய்து வருகிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சிதான் இருக்கிறது. அதனால் அவர்களே முன்னின்ன்று குருப சமுதாயத்தினருக்கு நல்லது செய்ய வேண்டும்.

சாதிவாரி மக்கள் தொகை...
குருப சமுதாயத்தை பிரிக்க ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சதி நடத்துகிறார்கள். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இடையூறு செய்தார். அவர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக ஏன் செயல்பட்டார் என்பது எனக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக முன்னாள் மந்திரி புட்டரங்கசெட்டி தெரிவித்த கருத்து உண்மைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story