சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு


சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 5:51 AM IST (Updated: 28 Dec 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை,

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பகவான்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி இந்து கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

விழாவையொட்டி சனீஸ்வரருக்கு பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள், திருநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது. சனி பகவான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோன்று திருக்கோகர்ணம், பிரகதாம்பாள் கோவில், சாந்தனாதஸ்வாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சனி பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்சி விழா நடைபெற்றது. விழாவில் சனீஸ்வர பகவானுக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பின்பு கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் சிறப்பு ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு சனீஸ்வர பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதில், கொப்பனாபட்டி, செம்பூதி, கொன்னையூர், காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி, பூலாங்குறிச்சி ஆகிய ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆலங்குடி

ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிவன் சன்னதியில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் நவக்கிரக மேடையில் உள்ள சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வுகள் முடியும்வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அபிஷேக, ஆராதனை முடிந்தபின்னர் கோவில் கதவு திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலில் தனிச்சன்னதியுடன் விளங்கும் பால சனீஸ்வரருக்கு பால், திரவியம், சந்தனம், மஞ்சள், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை மற்றும் மாலையில் சனி பெயர்ச்சிக்கான சிறப்பு அபிஷேகம் ஒரு வாரம் நடைபெறும்.

கீரமங்கலம்

கீரமங்கலத்தில் உள்ள மெய்நின்ற நாதர் கோவிலில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி மற்றும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.

திருவரங்குளம்-கீரனூர்

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்பாள் உடனுறை அரங்குள நாதர் கோவிலில் சனீஸ்வர பகவான் உள்ளிட்ட 9 நவக்கிரகங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காட்டினர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் பெயர், நட்சத்திரங்களைக் கூறி அர்ச்சனை செய்தனர். மதியம் கோவில் அருகில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கீரனூர் சிவன் கோவிலில் உள்ள சனி பகவான் மற்றும் அதனை சுற்றியுள்ள 9 நவக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Next Story