கொலையா? தற்கொலையா?; நடிகர் சுஷாந்த் சிங் மரண அறிக்கையை உடனே சி.பி.ஐ. பகிரங்கப்படுத்த வேண்டும்; மந்திரி அனில் தேஷ்முக் வலியுறுத்தல்
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் வலியுறுத்தி உள்ளார்.
சுஷாந்த் சிங் மரணம்
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கர வர்த்தி கைது செய்யப்பட்டார்.
இதற்கு மத்தியில் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், இது தற்கொலை தான் என்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
மந்திரி வலியுறுத்தல்
இதுகுறித்து மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கி 5 முதல் 6 மாதங்களாகி விட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று என்னிடம் மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். ஆனால் சி.பி.ஐ. இன்னும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாமல் உள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் சி.பி.ஐ. அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story