தா.பேட்டையில் பரபரப்பு: திருட வந்த வீட்டில் முதியவர் திடீர் சாவு


தா.பேட்டையில் பரபரப்பு: திருட வந்த வீட்டில் முதியவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2020 7:21 AM IST (Updated: 28 Dec 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டையில் திருட வந்த வீட்டில் முதியவர் திடீரென உயிரிழந்தார்.

தா.பேட்டை,


திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் வசித்து வருபவர் அப்பாவு. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். தற்போது பிள்ளாதுரை கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இவரது வீடு பழுதடைந்ததால் எதிரே வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

மாரடைப்பால் திருடன் சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி தா.பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம் மற்றும் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இறந்து கிடந்த முதியவர், துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 71) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது. இதனால் அப்பாவுவின் வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட அவர், திருடுவதற்காக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பரபரப்பு

இதையடுத்து சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட வந்த இடத்தில் மாரடைப்பால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story