மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த டெய்லர் போலீசார் தீவிர விசாரணை


மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த டெய்லர் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 28 Dec 2020 8:53 AM IST (Updated: 28 Dec 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் டெய்லர் பிணமாக மிதந்்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்த ராசையா நாடார் மகன் அந்தோணி லாசர் (வயது 44). டெய்லர். இவருக்கு ரோஸ்லின்மேரி (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று மதியம் மட்டன் வாங்கி வீட்டில் சமைக்க கொடுத்துள்ளா். பின்னர் வெளியே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் குடும்பத்தினர் தேடினர். ஆனால் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

கிணற்றில் பிணமாக மிதந்தார்

மறுநாளும் அவரைப்பற்றி தகவல் கிடைக்காததால் ரோஸ்லின்மேரி மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் சென்று அந்தோணி லாசரை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழசிந்தாமணி ஊரில் இருந்து மீரான்குளம் செல்லும் சாலையோரம் உள்ள கிணற்றில் அந்தோணி லாசர் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்தது எப்படி? ஏதேனும் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story