கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்த அய்யப்ப பக்தர்கள்


கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்த அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 28 Dec 2020 9:27 AM IST (Updated: 28 Dec 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் அய்யப்ப பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லோக்வீர் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 46-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு காயத்ரி வித்யாலயா மண்டபத்தில் வைத்து சாஸ்தா ஹோமம், விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஹரிஹரபுத்ர அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அங்கப்பிரதட்சணம்

அன்னதானத்தின் கடைசி பந்தி முடிந்த பின், அந்த இலைகளை எடுக்காமல், அதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அன்னதானத்தில் ஏதேனும் ஒரு இலையில் அய்யப்பனே வந்து உணவு அருந்துவதாக ஐதீகம். எனவே பிரார்த்தனை செய்து கொண்டு அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்வோருக்கு நினைத்த காரியம் கைகூடும் என்பதும், தீராத பிணி நீங்கும் என்பதும் நம்பிக்கை. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஹரிஹரபுத்ர அய்யப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை மற்றும் படி பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப சேவா சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Next Story