51 வயது பெண்ணை கொன்ற விவகாரம்: சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து தீர்த்துக்கட்டினேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


51 வயது பெண்ணை கொன்ற விவகாரம்: சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து தீர்த்துக்கட்டினேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Dec 2020 9:51 AM IST (Updated: 28 Dec 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே 51 வயது புதுப்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொலை செய்ததாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள பகுதியான காரகோணத்தை சேர்ந்தவர் சாகாகுமாரி (வயது 51). இவர் அந்த பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். வயது முதிர்ந்த பின்பும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

சாகாகுமாரி தனது வயதான தாயாரை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி அழைத்து செல்வார். அந்த ஆஸ்பத்திரியில் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பத்தாங்கல் பகுதியை சேர்ந்த அருண் (28) என்பவர் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாகாகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு அருணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது பெற்றோர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

வீட்ேடாடு மாப்பிள்ளை

திருமணத்திற்கு பிறகு அருண் வீட்டோடு மாப்பிள்ளையாக காரகோணம் பகுதியில் உள்ள சாகாகுமாரியின் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சாகாகுமாரி தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் அவரின் நண்பர்களுக்கும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருண் சில தினங்களுக்கு முன்பு மின்சார அடுப்பு மூலம் மின்சாரம் பாய வைத்து மனைவியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சாகாகுமாரி மீது நூதன முறையில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். அருண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறேன். அந்த ஆஸ்பத்திரியில் சாகாகுமாரி அவரது தாயாரை சிகிச்சைக்கு அழைத்து வருவது வழக்கம். சாகாகுமாரி வயது தெரியாமல் இருக்க ேமக்கப் செய்து எப்போதும் பள பளவென இருப்பார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சாகாகுமாரி பெயரில் 10 ஏக்கர் விவசாய நிலம், சொந்தவீடு மற்றும் அழகு நிலையம் மூலமாக அதிக வருமானம் வருவதை தெரிந்து கொண்டேன். இதையடுத்து அவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டி 2 மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டேன்.

சொத்து மீது ஆசை

எங்களது திருமண புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் எங்களின் வயது வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த நண்பர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். இது எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் எனக்கு அவரது சொத்து மீதும் ஆசை இருந்தது. பியூட்டி பார்லர் மூலமாகவும் அதிக வருமானம் வந்து கொண்டிருந்தது. இதனால் அவரை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன்.

சொத்தை சொந்தமாக்கும் நோக்கத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டிய மின்சார ஒயரை வீட்டின் வாசலில் போட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தேன். பின்னர் மின்சாரம் தாக்கியது போன்று நாடகம் ஆடினேன். ஆனால், போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சொத்துக்கு ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்த சம்பவம் தமிழக- கேரள எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story